* 2 வடமாநில வாலிபர்கள் கைது, லட்சக்கணக்கில் பணம் தப்பியது
வேலூர், ஜன.1: சென்னையில், ஆந்திராவில் கைவரிசை காட்டிய நிலையில் காட்பாடியிலும் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு பகுதியில் தனியார் வங்கியில் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தை சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைப்பதற்கான ஊழியர்கள் வந்தனர். அப்போது மர்ம ஆசாமிகள், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து ஏடிஎம் மைய காவலாளிக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காவலாளி தீவிரமாக கண்காணித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 29ம் தேதி மர்ம ஆசாமிகள் ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, திறக்க முடியாமல் திரும்பி சென்றது சிசிடிவி கேமராக்கள் மூலம் தெரியவந்தது. அதில், 2 வாலிபர்கள் பணம் எடுப்பதுபோல் வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு காவலாளி மறைவான இடத்தில் இருந்தபடி ஏடிஎம் மையத்தை கண்காணித்து வந்தார்.
அப்போது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த 2 வாலிபர்கள் மீண்டும் ஏடிஎம் மையத்திற்குள் சென்றதை பார்த்தார். உடனே காவலாளி விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், எஸ்ஐ பாரத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் உத்தரபிரதேசம் மாநிலம் மைன்புரி மாவட்டத்தை சேர்ந்த பல்ராம்(26), புதுடெல்லி வடமேற்கு டெல்லி மாவட்டத்தை சேர்ந்த தர்மேந்திரா(25) என்பதும், ஏடிஎம்மில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து பணம், ஏடிஎம் கார்டுகள், செல்போன்கள், ஸ்குரூ டிரைவர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் சென்னையில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அதேபோல் ஆந்திராவில் உள்ள ஏடிஎம்களிலும் கைவரிசை காட்டி உள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
