மாமல்லபுரம், ஜன.1: ஆங்கில புத்தாண்டையொட்டி மாமல்லபுரம் விடுதிகளில் ஆடல், பாடல், மது விருந்துகளுடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அப்போது, ஆண்களுக்கு நிகராக பெண்களும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்வர். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் பண்ணை வீடுகள் மின் விளக்குகளால் ஜொலித்தது. இதனால், நேற்று இரவு மாமல்லபுரம் புத்தாண்டு களைகட்டி காணப்பட்டது.
புத்தாண்டை கொண்டாடுவதற்காக நேற்று இரவு ஏராளமானோர் சென்னையில் இருந்து கார் மூலம் மாமல்லபுரம் வந்தனர். அந்த, வாகனங்களை கிழக்கு கடற்கரை சாலை நுழைவு பகுதியான சிற்பக்கலைத் தூணுக்கு அருகே தடுத்து நிறுத்தி அறை முன்பதிவு செய்ததற்கான ரசீது வைத்துள்ள வாகனங்களை மட்டும் நகருக்கு உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர், மற்ற வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
