×

2026-27ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: 2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நிதி ஆயோக் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கம். இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்னோட்டமாக, பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படுவது மரபாக இருந்து வருகிறது.

இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் குறித்து டெல்லியில் உள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் போது, ‘வேளாண் உற்பத்தித் திறனை அதிகரித்தல், உள்கட்டமைப்புத் துறையில் அந்நிய முதலீடுகளை ஈர்த்தல், நிதிச் சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவித்தல்’ ஆகியவை குறித்து நிபுணர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்தும், உலகப் பொருளாதார சவால்களைத் திறம்பட எதிர்கொள்வது குறித்தும் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை பிரதமரிடம் பகிர்ந்துகொண்டனர். வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத் திசையை நிர்ணயிக்கும் வகையில் இக்கூட்டம் அமைந்துள்ளது

Tags : PM Modi ,New Delhi ,Narendra Modi ,Niti Aayog Office ,EU government ,Parliament ,
× RELATED வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல்...