சென்னை: திருத்தணி தாக்குதல் சம்பவம் குறித்து சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; டிசம்பர் 27ம் தேதி திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே சிலர் நபர்களால் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் புகாரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யபட்டது. தாக்குதல் நடத்திய 4 சிறார்களும் டிசம்பர் 28ம் தேதி கைது செய்யப்பட்டு, இளைஞர் நீதிக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இளஞ்சிறார்கள் செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
திருத்தணி தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபருக்கு முறையான உதவியும் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன் ஒடிசா இளைஞரை 4 இளஞ்சிறார்கள் தாக்கியுள்ளனர். குற்றவாளிகள் மீது அதிகபட்சமாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடியா மொழி தெரிந்த முன்னாள் ராணுவ வீரர் உதவியுடன் பாதிக்கப்பட்ட நபரிடம் வாக்குமூலம் பெற்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளில் 3 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிபதி உத்தரவுப்படி ஒரு சிறார் குற்றவாளி மட்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். குற்றவாளிகளில் ஒருவரை பெற்றோரிடம் அனுப்பியது நீதிபதியின் முடிவு. பாதிக்கப்பட்டவர் யதார்த்தமாக பார்த்தபோது ஏன் முறைத்துப் பார்க்கிறாய் என குற்றவாளிகள் கேட்டதே மோதலின் தொடக்கம். வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுவது தவறானது. தாக்குதலுக்கு உள்ளான நபர் இறந்துவிட்டதாக பரவும் தவறானது. பாதிக்கப்பட்ட நபர் உரிய சிகிச்சைக்குப் பிறகு பாதுகாப்பாக உள்ளார்.
முன்விரோதம் இருந்ததால் பாதுகாப்புக்காக பட்டா கத்திகள் வைத்திருந்ததாக பிடிபட்ட சிறார்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். சிறார்களிடம் இருந்து 2 பட்டாக் கத்திகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரயிலில் நடந்த தாக்குதல் குறித்து ரயில்வே போலீசாரும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 500 கிலோ கஞ்சா, 60,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூரில் பிடிபட்ட நபர்கள் அளித்த தகவல் அடிப்படையில் பிற மாநிலங்களில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் பிடிபட்ட நபர்கள் அளித்த தகவல்படி ஆந்திரா, ஒடிசாவில் 1,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா பறிமுதல் மட்டுமல்ல, அது எங்கிருந்து வருகிறது என்ற இடங்களையும் தேடிச் சென்று அனுப்புபவர்களையும் கைது செய்யப்பட்டுள்ளது. மலைப் பகுதி உள்ளிட்ட சவாலான இடங்களுக்கும் சென்று காவல்துறையினர் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். திருத்தணி ரயில் தவிர புலம்பெயர் தொழிலாளர்கள் மீது வேறு எங்கும் தாக்குதல் நடைபெறவில்லை. பிற மாநிலத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்கள் வசிக்கும் இடங்களில் ரோந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.
