- சிபிஐ
- தில்லி
- விஜய்
- கரூர்
- புது தில்லி
- தமிழ்நாடு வெற்றி கட்சி
- வேலுச்சிபுரம், கரூர் மாவட்டம்
- தமிழ்நாடு…
புதுடெல்லி: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக காவல்துறை சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சிபிஐ இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் கரூரில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஆதாரங்களை சேகரித்தனர். இதன் பிறகு வழக்கின் விசாரணைக்காக தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் சிபிஐ தரப்பில் வழங்கப்பட்ட சம்மனை அடிப்படையாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரும், அதேப்போன்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி ஜோஸ் தங்கையா, ஏ.டி.எஸ்.பி பிரேம் ஆனந்தம், டி.எஸ்.பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து மேற்கண்ட விவகாரத்தை சிபிஐ எஸ்.பி சுனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதில் முன்னதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம், \” வழங்கப்பட்ட நேரத்திற்கு சரியாக வராமல் விஜய் காலதாமதம் செய்தது ஏன்?. இதனால் அதிகப்படியான கூட்டம் கூடியதா?, தாமதத்திற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் முன் கூட்டியே தெரிவிக்காதது ஏன் ? என்று கிடுக்குப்பிடியான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்க முடியாமல் தவெக நிர்வாகிகள் திணறியதாக கூறப்படுகிறது.
காவல்துறை தரப்பின் பாதுகாப்பு குறைபாடுகளே நடந்த நிகழ்வுக்கு காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிபிஐ தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விரிவான விளக்கத்தை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் நேற்று காலை 10மணிக்கு தொடங்கிய இந்த விசாரணையானது இரவு 7 மணி வரை நடைபெற்றது.
* இன்றும் விசாரணை
தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நேற்று இரவு கூறுகையில், சிபிஐ கேட்ட விளக்கங்களை நாங்கள் கொடுத்திருக்கிறோம். இந்த கரூர் சம்பவம் எதனால் நடந்தது என உலகத்திற்கே தெரியும் .அதற்கான சாட்சிகளாக ஊடகங்களும் நேரில் பார்த்த மக்களும் இருக்கிறார்கள் எனவே சிபிஐக்கு ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவர்களுக்கு தேவையான விளக்கங்களை கொடுத்திருக்கிறோம். இன்னும் கூடுதல் விளக்கங்கள் தேவைப்படுவதால் நாளையும்(இன்று) விசாரணை நடைபெறுகிறது. மீண்டும் நாங்கள் நேரில் ஆஜராகி விளக்கங்களை கொடுப்போம். சிபிஐ என்ன மாதிரியான கேள்விகளை கேட்டார்கள் என்பது குறித்து பொதுவெளியில் தெரிவிக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு தேவையான அனைத்து விளக்கங்களையும் நாங்கள் கொடுத்தோம் என்றார்.
