கொல்கத்தா: மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்து 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 32 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி நேரில் விசாரிக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மேற்கு வங்க கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான தமிழ்நாட்டை சேர்ந்த சி. முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மக்ரஹாட்டில் ஷிராகோல் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்காளர் பட்டியல் விசாரணை மையத்தில் விசாரணை நடத்தினார். அப்போது ஏராளமான பெண்கள் மையத்தை முற்றுகையிட்டனர். சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளரின் வாகனத்தின் வெளியேறும் வழியை மறித்து, காரின் பானட் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டினர்.
அப்போது, காவல்துறையினர் ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்து, பெண்களை வழியிலிருந்து அப்புறப்படுத்த கடுமையாக முயற்சித்தனர். அப்போது காரின் ஓட்டுநர் பக்க கதவின் கைப்பிடி உடைந்தது. தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துகிறோம் என்ற பெயரில் சாதாரண மக்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், உடல்நலக்குறைவுள்ள முதிய குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை அழைப்பதற்கு எதிராக இந்த போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக முருகன் ஐஏஎஸ் கூறுகையில்,’ தேர்தல் ஆணையத்தால் எனக்கு ஒதுக்கப்பட்ட ஒரு வேலையைச் செய்யவே நான் இங்கு வந்துள்ளேன், இடையூறு செய்ய முயற்சிகள் செய்யப்பட்டாலும், அந்தப் பணியை நான் முடிப்பேன். என் பாதுகாப்பு குறைபாடு குறித்து நிர்வாகம்தான் முடிவு செய்யும்’ என்றார். இந்த வீடியோவை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
