×

மலையில் இருந்து உருண்டது கார் 2 தெலங்கானா பெண்கள் அமெரிக்கா விபத்தில் பலி

கலிபோர்னியா: தெலங்கானாவின் மகபூபாபாத் மாவட்டம் கார்லா மண்டலத்தை சேர்ந்தவர்கள் கடியால பாவனா, (24), புல்லகண்டம் மேகனா ராணி (25). இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை படிக்க அமெரிக்கா சென்றனர். அங்கே இருவரும் வேலை தேடிக்கொண்டு இருந்தனர். நெருங்கிய தோழிகளாக மாறிய இருவரும், நண்பர்கள் 8 பேருடன் இரண்டு கார்களில் கலிபோர்னியாவுக்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர். அவர்கள் பயணித்த கார், அலபாமா மலைப்பகுதி சாலையில் ஒரு வளைவில் திரும்பியபோது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாவனா, மேகனா இருவருமே பலியாகினர். தகவல் அறிந்த அமெரிக்கா போலீசார், சம்பவ இடம் சென்று உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கி உள்ளனர். விபத்து குறித்து சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரின் உடல்களை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர்கள் ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளனர்.
கலிபோர்னியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விபத்துக்கான சரியான காரணத்தை தற்போது விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ள தெலுங்கு புலம்பெயர் சமூகத்தினரும் 2 பேரின் சடலத்தை தெலங்கானாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags : Telangana ,US ,California ,Kadiyala Bhavana ,Pullakandam Meghana Rani ,Karla Mandal ,Mahabubabad district of ,
× RELATED முக்கிய பொருளாதார பாதையில்...