×

உக்ரைனும் ரஷ்யாவும் அமைதி ஒப்பந்தத்திற்கு அருகில் உள்ளன: ஜெலன்ஸ்கியை சந்தித்த பின் டிரம்ப் நம்பிக்கை

பாம் பீச்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பின் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘ரஷ்யாவும் உக்ரைனும் முன்னெப்போதையும் விட அமைதி ஒப்பந்தத்தில் மிக நெருக்கத்தில் உள்ளன’ என்றார். ஆனாலும் பேச்சுவார்த்தைகள் சிக்கலானவை என்றும், அவை முறிந்து போய் போர் பல ஆண்டுகள் நீடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறி உள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் சுமார் 4 ஆண்டாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது ரிசார்ட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேசினார். இதற்கு முன்பாக டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் இரண்டரை மணி நேரம் தொலைபேசியில் ஆலோசித்தார். டிரம்புடனான சந்திப்புக்காக ஜெலன்ஸ்கி அமெரிக்கா வந்து கொண்டிருந்த போதே, உக்ரைன் மீது ரஷ்யா பல டிரோன், ஏவுகணை கொண்ட பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த சூழலில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்தது.

இதில், உக்ரைனுக்கான 20 அம்ச அமைதி திட்டம் குறித்து டிரம்ப், ஜெலன்ஸ்கியிடம் பேசினார். இதுதொடர்பாக ஏற்கனவே புடினுடனும் பேசியிருப்பதாக டிரம்ப், ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ஜெலன்ஸ்கி அடுத்த 50 ஆண்டிற்கு உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் ரஷ்யா மீண்டும் போர் தொடுக்காமல் இருப்பது தொடர்பாக பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில் நேட்டோ அமைப்பில் சேரும் திட்டத்தை நிரந்தரமாக கைவிடுவதாகவும் கூறி உள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு பின் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது டிரம்ப் கூறுகையில், ‘‘ரஷ்யா இன்னும் அமைதியை விரும்புவதாகவே நான் நம்புகிறேன். இந்த அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் வெற்றி பெற வேண்டுமென ரஷ்யாவும் விரும்புகிறது. எனவே உக்ரைனும் ரஷ்யாவும் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் முன்னெப்போதையும் விட மிக நெருக்கமாக உள்ளன. அதே சமயம் ரஷ்யா கட்டுப்படுத்தும் உக்ரைன் பகுதிகளை தக்க வைத்துக் கொள்வது, எதிர்காலத்தில் மீண்டும் படையெடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் போன்ற பல சிக்கலான விஷயங்கள் உள்ளன. அவை தீர்க்கப்படும் என நம்புகிறேன். இன்னும் ஒரு சில வாரங்களில் அனைத்தும் தெரிந்து விடும்.

ஒருவேளை இந்த முயற்சியில் திடீர் திருப்பமாக பேச்சுவார்த்தை முறிந்து போர் பல ஆண்டுகள் நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.
ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘‘அதிபர் டிரம்பின் முயற்சிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாங்கள் அமைதிக்கு தயாராக உள்ளோம்’’ என்றார். இந்த சந்திப்பை தொடர்ந்து டிரம்ப், ஜெலன்ஸ்கி இருவரும் ஐரோப்பிய தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடினர். அடுத்ததாக புடினுடன் மீண்டும் தொலைபேசியில் பேசுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். எனவே ரஷ்யா-உக்ரைன் போரில் அடுத்த சில நாட்களில் முடிவு எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* உக்ரைனுக்கு அமெரிக்கா 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க வரைவு அமைதி ஒப்பந்தத்தில் முன்மொழிந்துள்ள நிலையில், 50 ஆண்டுகளுக்கு தங்களுக்கு உத்தரவாதம் வேண்டுமென ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
* அமெரிக்காவின் 20 அம்ச அமைதி திட்டத்தை உக்ரைன் மக்கள் தேசிய வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்க வேண்டுமென ஜெலன்ஸ்கி விரும்புகிறார். இந்த வாக்கெடுப்பு நடத்த குறைந்தது 2 மாதம் போர் நிறுத்தம் தேவை.
* முழுமையான தீர்வு இல்லாமல் போர் நிறுத்தம் செய்ய ரஷ்யா தயாராக இல்லை.

Tags : Ukraine ,Russia ,Trump ,Zelensky ,Palm Beach ,US ,President Trump ,President ,Volodymyr Zelensky ,
× RELATED முக்கிய பொருளாதார பாதையில்...