அகமதாபாத்: பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவதால், வரும் 2029ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் பாஜகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அமித் ஷா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு அமைந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த நிலையில், அந்த கூட்டணி அரசு தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்று தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள நவி வன்சார் கிராமத்தில் 330 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன வடிகால் திட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘ராகுல் காந்தி அவர்களே… தோல்வியடைந்து சோர்ந்து போகாதீர்கள்; மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்திக்கும்; காங்கிரஸ் ஏன் தோற்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உணரவில்லை’ என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
மேலும், ‘ராமர் கோயில், சட்டப்பிரிவு 370 நீக்கம், சர்ஜிக்கல் ஸ்டிரைக், பொது சிவில் சட்டம் மற்றும் முத்தலாக் தடை சட்டம் போன்ற மக்கள் விரும்பும் திட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பதே அதன் தொடர் தோல்விக்குக் காரணம்; பிரதமர் மோடி தலைமையிலான அரசு போராட்டங்களுக்குப் பணியாமல் மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுவதால், வரும் 2029ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
