வங்கதேசம்: தங்கள் நாட்டில் இந்துக்கள் குறிவைக்கப்படவில்லை என இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு வங்கதேசம் விளக்கம் அளித்துள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர ரந்திர் ஜெஸ்வால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘வங்கதேசத்தில் சட்டம் – ஒழுங்கை பராமரிக்க வேண்டியது இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பு.
அங்குள்ள நிலவரங்களை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக தொடரும் பகைமை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டத்தில் இந்து இளைஞர் ஒருவர் சமீபத்தில் கொல்லப்பட்டதை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவிக்கும் விதமாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், சில தனிப்பட்ட குற்ற சம்பவங்களை இந்துக்களுக்கு எதிரானதாக திசை திருப்ப இந்தியா முயல்கிறது என வங்கதேச அதிகாரி மஹபூபுல் தெரிவித்தார் . தங்கள் நாட்டில் இந்துக்கள் குறிவைக்கப்படவில்லை. வங்கதேசத்தில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்நோக்கம் கொண்ட தவறான தகவல்களை இந்தியா பரப்புவதாக அந்நாட்டு அரசு பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை வங்கதேசத்தில் அதிகரித்து வருவதாக இந்தியா கவலை தெரிவித்த நிலையில், சில தனிப்பட்ட குற்றச் சம்பவங்கள் தவறாக சித்தரிக்கப்படுவதாக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
