சேலை என்பது உலகின் மிகப்பழமையான ஆடை வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வடமேற்கு இந்தியாவில் சிந்து சமவெளி நாகரீகத்தில் சேலைகளை பயன்படுத்தினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் சேலையின் பயன்பாடு தொடங்கியுள்ளது. முகாலயர்கள் வருகைக்கு பின்னர் சேலையில் கற்கள், ஜிமிக்கிகள் கொண்ட வேலைப்பாடுகள், முந்தியில் அன்னம், மயில், யானை போன்ற உருவங்கள் பொறித்து அணிய ஆரம்பித்தனர்.
பிரிட்டீஷார் வருகைகக்கு பின்னர், ஆடையின் வடிவம் மற்றொரு வடிவத்திற்கு மாறியது. நீண்ட தைக்கப்படாத ஆடையுடன் தைக்கப்பட்ட ரவிக்கை மற்றும் பாவாடையாக இணைக்கப்பட்டது. பின்னாட்களில் சேலையுடன் இந்த இரண்டும் இணைந்து கொண்டது. ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு புடவையும் நாலரை முதல் எட்டு முழம் என்ற அளவும் நிர்ணயிக்கப்பட்டது. நாகரீகத்தின் சுழற்சியில் கால்சட்டை (பேன்ட்) ஆண்களுக்கு சவுகரியான உடையானது.
ஆனால் பெண்களோ எத்தனை மாற்றங்கள் வந்தாலும் தங்களது தனித்துவமான உடை சேலை தான் என்பதில் காலம் கடந்தும் உறுதியாக உள்ளனர். இதனால் தற்போதைய சூழலிலும் சேலைகளுக்கான மவுசு சமூகத்தில் குறையவில்லை. இப்படிப்பட்ட பெருமை மிகுந்த ஆடையான சேலையில் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 21ம் தேதி (இன்று) உலக சேலை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இது குறித்து பாரம்பரிய சேலைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மூத்தநெசவாளர்கள் கூறியதாவது: சேலை என்பதை பெண்களுக்கான அடையாளம் என்று மட்டுமே நாம் நினைப்பது தவறு. சேலைகட்டிய பெரும்பாலான பெண்கள் வரலாற்று நாயகிகளாக உருவெடுத்து நிற்கின்றனர். வாரணாசி போரில் வீரமங்கை ஜான்சிராணி சேலை கட்டிக் கொண்டு தான் போரிட்டார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர் மகாராஷ்டிராவில் பிறந்த சாவித்திரிபூலே. தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு கற்பிக்கச் சென்ற இவர் மீது அந்தக்காலத்தில் தாக்குதல்கள் தொடர்ந்தது.
அப்போது கையில் மாற்று சேலையோடு சென்று பாடம் நடத்தினார் என்பதும் வரலாறு. கேரளாவின் முளச்சிபரம்பில் பெண்கள் சேலையை கட்டக்கூடாது என்ற துஷ்பிரயோகம் நடந்த போது, அதற்காக பெரும் போராட்டம் நடத்தியவர்கள் அங்குள்ள பெண்கள்.இப்படி பல்வேறு சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவை பொறுத்தவரை 80 விதமான வடிவங்களில் சேலைகள் உள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் புடவையின் தரம், ரகம் வேறுபடும்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், குஜராத்தில் பாந்தினி, மகாராஷ்டிராவில் பைத்தானி, வாரணாசியில் பனாரஸ், மைசூரில் மைசூர்பட்டு, கேரளாவில் செட்முண்டு, பெங்காலில் பல்சுரி பட்டு என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பாரம்பரியமும், கலாச்சார பெருமைகளும் உண்டு. இது மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் பெண்கள் 108வகையான சேலைகளை பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இப்படி வரலாற்றோடு கலாச்சார பெருமையும் நிறைந்திருப்பதால் தான் சேலைகளுக்கான மவுசு இன்றளவும் தொடர்கிறது. தற்போதைய நிலவரப்படி உலக அரங்கில் 38 ஆயிரம் கோடி வர்த்தக மதிப்பை கொண்டுள்ளது ேசலைகள் தயாரிப்பு. இது அடுத்த 6 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடியாக உயரும் என்றும் சேலை வர்த்தக ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு நெசவாளர்கள் கூறினர்.
* 70% பேரின் முடிவு என்பது இதுதான்
சேலையின் ஆரம்பம் எப்போதுமே அறிவியல்பூர்வமானது. மோசமான கோடையில் குளிராக வைத்திருக்கும். குளிர்காலத்தில் வெப்பத்தை அடைத்து நம்மை இதமாக வைத்திருக்கும். இதனால் எந்த பருவத்திலும் அணிவதற்கு ஏற்றது புடவைகள். வெவ்வேறு கலாசாரங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளில் பெண்கள் பங்கேற்கலாம். அதற்கு தகுந்தது போல் விதம்விதமான உடைகளை பெண்கள் தேர்வு செய்வதில் அதிகநேரம் எடுத்துக்கொள்கின்றனர். கடைசியில் தங்களிடம் இருக்கும் நல்லசேலைகளில் ஒன்றை அணிந்து செல்லலாம் என்பதே 78சதவீதம் பெண்கள் எடுக்கும் முடிவாக உள்ளது என்கின்றனர் உளவியல் சார்ந்த ஆடைவல்லுநர்கள்.
* தலைநகரம் தமிழ்நாடு
தென்ஆசியாவில் சேலைக்கான வரலாறு என்பது சிறப்பு வாய்ந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் சேலைகளின் மவுசு என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு பெற்ற சேலைகள், தனித்துவம் வாய்ந்த அடையாளங்களாக திகழ்கிறது. உத்திரபிரதேசத்தில் தயாராகும் பனாரஸ் சேலைகள், ராஜஸ்தான், குஜராத் பகுதிகளை மையமாக கொண்ட பாத்தினி சேலைகள், கர்நாடகத்தை மையமாக கொண்ட மைசூர் சில்க் சேலைகள் என்று இதனை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவை அனைத்திற்கும் மேலாக தமிழகத்தில் தயாராகும் காஞ்சிபுரம், திருபுவனம் பட்டுச்சேலைகள், ஆரணி பட்டுச்சேலைகள், மதுரை சுங்குடிச்சேலைகள் உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்தவகையில் பட்டு சேலைகளின் தலைநகரமாக விளங்குகிறது தமிழ்நாடு என்பதும் பெருமைக்குரியது.
