×

இன்று மோகினி அலங்காரத்துடன் பகல் பத்து உற்சவம் நிறைவு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி: பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து 9ம் திருநாளான நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் முத்து திருநாரணன் கொண்டை, முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம், முத்து அங்கி, ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், மகரி, சந்திர ஹாரம், சுட்டி பதக்கம், 2 வட முத்து மாலை, முத்து திருவடி, முத்து கர்ண பத்ரம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

பகல் பத்து 10ம் திருநாளான இன்று (29ம் தேதி) வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சென்றடைவார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இதன் தொடர்ச்சியாக ராப்பத்து நாளை முதல் தொடங்குகிறது.

நாளை (செவ்வாய்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து தனுர் லக்னத்தில் புறப்பட்டு வெளியில் வருவார். 2ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3ம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.

அதிகாலை 5.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். பக்தர்கள் ‘ரங்கா ரங்கா’ கோஷம் முழங்க அரங்கனை பின்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக வருவார்கள். பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார்.

அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.அதன்பின் சாதரா மரியாதையாகி (பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Tags : Pagal Patu Utsavam ,Mohini ,Srirangam Ranganatha temple ,Trichy ,Vaikuntha Ekadashi festival ,Vaikuntha ,Thirunedunthandagam ,Pagal Patu… ,
× RELATED சென்னை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை