- கீவ்
- வேந்தர்
- புதினா
- உக்ரைன்
- ஹாலிஃபாக்ஸ்
- ரஷ்யா
- தலைநகர்
- அதிபர் புதினா
- ஜெலான்ஸ்கி
- ஜெலென்ஸ்கி
- எங்களுக்கு
- ஜனாதிபதி
- டொனால்டு டிரம்ப்
ஹாலிபேக்ஸ்: உக்ரைன் தலைநகர் மீதான ரஷ்யாவின் உக்கிரமான தாக்குதலுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் புதினை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து, 20 அம்ச அமைதி திட்டத்தை பற்றி விவாதிக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகருக்கு வருகை தந்த அவர், அங்கு கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதல்களை சுட்டிக்காட்டி, ‘நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ஆனால் அவர் (புதின்) ஒரு போர் மனிதர்’ என்று குறிப்பிட்டார். சர்வதேச அமைதி முயற்சிகளுக்கு புதின் அளிக்கும் பதில் இதுதான் என்று கூறிய அவர், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவுக்கு உண்மையான நோக்கம் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை தொடங்கிய ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் சுமார் 10 மணி நேரம் நீடித்தது. இந்தத் தாக்குதலில் ஈரானிய தயாரிப்பான 519 ஷாஹத் டிரோன்கள் மற்றும் கின்ஸ்ஹால் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட 40 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 32 பேர் படுகாயமடைந்தனர். முதியோர் இல்லம் ஒன்றிலிருந்தும் பலர் மீட்கப்பட்டனர்.
எரிசக்தி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலால், கடும் குளிருக்கு மத்தியில் கீவ் பிராந்தியத்தில் சுமார் 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் மற்றும் வெப்பமூட்டும் வசதிகள் துண்டிக்கப்பட்டன. உக்ரைனின் ராணுவத்திற்கு உதவும் எரிசக்தி மையங்கள் மீது துல்லியமான ஆயுதங்கள் மூலம் ‘மிகப்பெரிய தாக்குதல்’ நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
