×

கைலாசநாதர், படவட்டம்மன் கோயில் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்: அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: பாடியில் உள்ள கைலாசநாதர், படவட்டம்மன் கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார். ந்து சமய அறநிலையத்துறையானது தொன்மை வாய்ந்த கோயில்களில் பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்தி வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி வழங்கி வருகின்றது. கடந்த நான்கரை ஆண்டுகளில் சென்னை மண்டலங்களில் ரூ. 86.68 கோடியில் 323 கோயில்கள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 207 கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன. அதேபோல் சாலை மட்டத்திலிருந்து தாழ்வாக உள்ள கோயில்களை நவீன தொழில்நுட்ப வசதியுடன் உயர்த்தி அமைக்கும் பணிகள் 25 கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் 14 கோயில்களின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

சென்னை, பாடியில் அமைந்துள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோயிலை சாலை மட்டத்திலிருந்து இரண்டரை அடி உயர்த்தி கருங்கல் கோயிலாக அமைத்தல், சாலக் கோபுரம் அமைத்தல், உப சன்னதிகள், மடப்பள்ளி மற்றும் அலுவலகம் கட்டுதல், புதிய கொடிமரம் நிறுவுதல், வெளிப்பிரகாரம் முழுவதும் கருங்கல் தரைத்தளம் அமைத்தல் போன்ற பணிகள் ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் கோயில் நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதேபோல், 70 ஆண்டுகள் பழமையான பாடி, எம்.டி.எச். சாலையில் அமைந்துள்ள படவேட்டம்மன் கோயிலானது சாலை மட்டத்தை விட தாழ்வாக அமைந்துள்ளது. இக்கோயிலை 5 அடி உயர்த்தும் பணிகள் ரூ.35 லட்சத்தில் நடைபெற்று வருவதோடு, ரூ. 47.75 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு நிலை விமானத்துடன் கருங்கல் கருவறை அமைக்கும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில் பாடி கைலாசநாதர் கோயில் பணிகளையும், படவட்டம்மன் கோயிலை உயர்த்தும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்த பின், பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் பாரதிராஜா, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் மூர்த்தி, மாநகராட்சி உறுப்பினர்கள் நாகவள்ளி, பூர்ணிமா, செயல் அலுவலர்கள் சசிகுமார், மோகன் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kailasanathar ,Badawatamman Temple ,Minister ,Sekharbhabu ,Chennai ,Badavatman ,Badi ,Hindu Religious Foundation ,
× RELATED இம்ரான் கானின் ஆதரவாளரால் பரபரப்பு;...