பாட்னா: பீகாரில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஜமுய் மாவட்டத்தின் பருவா ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலில் மொத்தமுள்ள 42 பெட்டிகளில் 19 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகிய நிலையில் 10 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன. நல்வாய்ப்பாக உயிர் சேதம் இல்லை.
கிழக்கு ரயில்வேயின் அசன்சோல் கோட்டத்திற்குட்பட்ட ஜசிதி – ஜாஜா ரயில் பிரிவில் நேற்று (டிசம்பர் 27, சனிக்கிழமை) இரவு ஜமுய் மாவட்டத்தின் சிமுல்தலா பகுதியில் உள்ள டெல்வா பஜார் அருகே, சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் படுவா நதி பாலத்தைக் கடந்தபோது திடீரென தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
நேற்று இரவு சுமார் 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த 10 ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி நேரடியாக படுவா நதிக்குள் விழுந்தன.மேலும் இரண்டு பெட்டிகள் பாலத்தின் ஓரத்தில் மிக ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன.விபத்தின் தாக்கத்தால் தண்டவாளங்கள் பெயர்ந்து அருகிலுள்ள பாதைகளிலும் விழுந்துள்ளன. இதனால் ஆறுக்கும் மேற்பட்ட பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி சேதமடைந்தன.
இந்த விபத்தினால் ஜசிதி – ஜாஜா வழித்தடத்தில் அப் மற்றும் டவுன் என இருபுறமும் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பல பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. ரயில்வே நிர்வாகம் தற்போது ரயில்களை மாற்றுப் பாதையில் இயக்கவும், பயணிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தகவல் அறிந்தவுடன் ஆர்.பி.எஃப், ரயில்வே போலீசார் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, ஆற்றில் விழுந்த மற்றும் தண்டவாளத்தில் சிதறிக்கிடக்கும் பெட்டிகளை அகற்றும் பணி யுத்த கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தண்டவாளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது அதிக பாரம் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
