புனே: மத்திய பிரதேச எல்லையில் ‘யுஎஸ்ஏ’ என்ற பெயரில் சட்டவிரோத ஆயுதங்கள் தயாரித்து வந்த மிகப்பெரிய நெட்வொர்க்கை புனே போலீசார் கூண்டோடு அழித்தனர். மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள பர்வானி மாவட்டத்தின் உமர்டி கிராமம், சட்டவிரோத ஆயுதத் தயாரிப்பின் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. இங்கு வசிக்கும் சிக்லிகர் சமூகத்தினர் பரம்பரைத் தொழிலாக இரும்பு வேலை செய்து வரும் நிலையில், அவர்கள் தயாரிக்கும் நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் ரிவால்வர்கள் ‘யுஎஸ்ஏ’ (உமர்டி சிக்லிகர் ஆர்ம்ஸ்) என்ற பெயரில் கள்ளச்சந்தையில் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன. புனே ரவுடி சரத் மோஹல் கொலை வழக்கு உட்பட குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களில் இந்த கிராமத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் இங்கு விசாரணைக்குச் சென்ற போலீசாரைக் கும்பல் தாக்கிய சம்பவமும், அதிகாரிகளைப் பிடித்து வைத்து மிரட்டிய சம்பவங்களும் ஏற்கனவே நடந்துள்ளன. இந்நிலையில், இந்தச் சட்டவிரோத கும்பலை ஒடுக்கப் புனே மாநகரப் போலீசார் 105 பேர் கொண்ட தனிப்படையுடன் மத்திய பிரதேச போலீசாரின் உதவியோடு மெகா ஆபரேஷனை நடத்தினர். நவீன ட்ரோன் கேமராக்கள் மற்றும் வயர்லெஸ் கருவிகள் உதவியுடன் அதிகாலை 4 மணிக்குத் திடீரென கிராமத்தைச் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த அதிரடி சோதனையில், சட்டவிரோதமாக இயங்கி வந்த 4 துப்பாக்கித் தொழிற்சாலைகள் மற்றும் ஆயுதங்களை வார்க்கப் பயன்படுத்தப்பட்ட 50 உலைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. மேலும் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கி குழல்கள், 14 தயாரிப்பு இயந்திரங்கள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாகச் சந்தேகத்திற்குரிய 47 பேரைப் பிடித்து போலீசார்த் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
