×

100 நாள் வேலை திட்டம் ரத்து ஜன.5ல் நாடு தழுவிய போராட்டம் தொடக்கம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பு பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடி யாரையும் கலந்தாலோசிக்காமல் தனிநபராக முடிவெடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ஒழித்து விட்டதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இத்திட்டத்தை காப்பாற்றுவதற்காக வரும் ஜனவரி 5ம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டங்கள் தொடங்கப்படும் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா, இமாச்சல் முதல்வர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர்களான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சிவராஜ் பாட்டீல், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும், தற்போதைய அரசியல் சூழல் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சமீபத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்ததை ரத்து செய்து விபி ஜி ராம் ஜி எனும் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் ஆட்சியில் 20 ஆண்டுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களில் ஒன்றாக திகழ்ந்தது. கிராமப்புற மேம்பாட்டிற்கு வித்திட்ட இத்திட்டதை நீக்கியதோடு, மகாத்மா காந்தி பெயரையும் திட்டத்திலிருந்து பாஜ அரசு நீக்கி உள்ளது.

இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இதில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தை காப்போம் என சபதம் எடுத்த காங்கிரஸ் தலைவர்கள், இதுதொடர்பாக வரும் ஜனவரி 5ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த முடிவு செய்தனர். இதுகுறித்து கூட்டத்திற்கு பின் கார்கேவும், ராகுல் காந்தியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கினர்.

அப்போது கார்கே கூறுகையில், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்பது சாதாரண ஒரு திட்டமல்ல, அது அரசியலமைப்பால் வழங்கப்பட்ட வேலை செய்வதற்கான உரிமை. இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் கோபத்தில் உள்ளனர். அரசாங்கம் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். காரிய கமிட்டிக் கூட்டத்தில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தை மையமாகக் கொண்டு ஒரு பிரசாரம் தொடங்க நாங்கள் உறுதிமொழி எடுத்துள்ளோம்.

இதற்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தைக் காப்போம்’ என்ற இயக்கம் வரும் ஜனவரி 5ம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்கப்படும். இதை காங்கிரஸ் முன்னின்று நடத்தும். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள விபி-ஜி ராம் ஜி சட்டம், மாநிலங்களுக்கு கூடுதல் செலவு சுமையை ஏற்படும். இது எந்த ஆலோசனையும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான முடிவு. இந்தச் சட்டம் ஏழைகளை நசுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. நாங்கள் இதற்கு எதிராகத் தெருக்களிலும் நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து போராடுவோம்’’ என்றார்.

பின்னர், ராகுல் காந்தி கூறியதாவது: இது பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போலவே, பிரதமர் மோடி தனி ஒருவராக மாநிலங்கள் மற்றும் ஏழை மக்கள் மீது நடத்திய பேரழிவு தாக்குதல். பிரதமர் தனது அமைச்சரவையைக் கலந்தாலோசிக்காமலும், இந்த விஷயத்தை ஆராயாமலும் தனி ஒருவராக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை அழித்துவிட்டார். நாங்கள் இதை எதிர்க்கப் போகிறோம். முழு எதிர்க்கட்சிகளும் எங்களுடன் அணிவகுக்கும் என்று நம்புகிறேன்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது ஒரு வேலைவாய்ப்புத் திட்டம் மட்டுமல்ல, மாறாக உலகம் முழுவதும் பாராட்டப்பட்ட மேம்பாட்டு கட்டமைப்பு. அதை ரத்து செய்வது என்பது உரிமை அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு மீதான தாக்குதல். ஜனநாயகக் கட்டமைப்பு மீதான தாக்குதல்.

அரசாங்கத்தின் மூன்றாம் நிலை மீதான தாக்குதல் மற்றும் நமது நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு மீதான தாக்குதல். இது இந்தியாவின் மாநிலங்கள் மீதான தாக்குதல், ஏனெனில் அவர்கள் மாநிலங்களுக்குச் சொந்தமான பணத்தையும், மாநிலங்களுக்குச் சொந்தமான முடிவெடுக்கும் அதிகாரத்தையும் பறித்துக்கொள்கிறார்கள். இது மாநிலங்களின் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல், ஏனெனில் உள்கட்டமைப்பை உருவாக்க 100 நாள் வேலை திட்டம் பயன்படுத்தப்பட்டது.

இது பலவீனமான பிரிவினருக்கு, பழங்குடியினருக்கு, தலித்துகளுக்கு, ஓபிசி-க்களுக்கு, ஏழைப் பொதுப் பிரிவினருக்கு மற்றும் சிறுபான்மையினருக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தப் போகிறது. அதே நேரத்தில், இது அதானிக்கு முழு அளவில் பயனளிக்கப் போகிறது. ஏழை மக்களிடமிருந்து பணத்தைப் பறித்து, அதானி போன்றவர்களிடம் ஒப்படைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

* பாஜவின் நோக்கம்
ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பின்னால் ஒரே ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது. ஏழைகளின் வேலைவாய்ப்பு உரிமையை அழிப்பது, மாநிலங்களிடமிருந்து பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை திருடுவது மற்றும் பணத்தை கோடீஸ்வர நண்பர்களிடம் ஒப்படைப்பது மட்டுமே மோடி அரசின் நோக்கம்.

தனித்து செயல்படும் பிரதமர் மோடியின் தன்னிச்சையான செயல்களுக்கு முழு நாடும் விலை கொடுக்க நேரிடும். வேலைகள் முடிவுக்கு வரும். கிராமப்புறப் பொருளாதாரம் சரிந்துவிடும். கிராமங்கள் பலவீனமடையும்போது, நாடும் பலவீனமடையும்’’ என கூறி உள்ளார்.

* காரிய கமிட்டி கூட்டத்தில் பாஜ, ஆர்எஸ்எஸ்சை புகழ்ந்த திக்விஜய் சிங்: பேசவிடாமல் கார்கே தடுத்ததால் பரபரப்பு
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக பாஜ மூத்த தலைவரும் மபி முன்னாள் முதல்வருமான திக்விஜய் தனது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தை ஒன்றை பகிர்ந்தார். அதில் பாஜ மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரது காலடியில் பிரதமர் மோடி அமர்ந்திருந்தார்.

இது குறித்து திக்விஜய் சிங் தனது பதிவில், ‘‘இது மிகவும் ஈர்க்கக் கூடியது. ஆர்எஸ்எஸ்சின் அடிமட்ட சுயம்சேவக், ஜன சங்கம் மற்றும் பாஜவின் தொண்டர் எப்படி தலைவர்களின் காலடியில் அமர்ந்து, பின்னர் மாநிலத்தின் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் ஆனார். இது தான் அமைப்பின் சக்தி. ஜெய் சீதா ராம்’’ என கூறி உள்ளார். ஏறகனவே காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் சமீபகாலமாக பாஜவையும் அதன் செயல்பாட்டையும் புகழ்ந்து வரும் நிலையில் திக்விஜய் சிங்கின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் இந்த படம் குறித்து அவர் பேசினார். அவர் கூறும்போது,’ஆளும் பாஜவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறவும், அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்றவும், அடிமட்ட அளவில் காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்துவது மிகவும் அவசியம். அதிகார பரவலாக்கத்தை அதிகரித்து, கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும்’ என்று அவர் பேசிக்கொண்டு இருந்த போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தவிர வேறு விஷயங்களை எழுப்ப வேண்டாம் என்று சில மூத்த தலைவர்கள் திக்விஜய்சிங்கை தடுத்தனர்.

ஆனாலும் அவர் ​​கூட்டத்தில் இருந்த மற்ற தலைவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்க விரும்புவதாகக் கூறிய போது, காங்கிரஸ் தலைவர் கார்கே குறுக்கிட்டு அவரது பேச்சை நிறுத்தும்படி கூறினார். அதன்பின்னர் திக்விஜய்சிங் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி, தான் அமைப்பு மற்றும் அதன் வலிமை பற்றி மட்டுமே பேசியதாகவும், பாஜ அல்லது ஆர்எஸ்எஸ் பற்றிப் பேசவில்லை என்றும், தான் அந்த இரண்டு அமைப்புகளுக்கும் தீவிரமாக எதிரானவன் என்றும் கூறினார்.

பின்னர் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்கள் இது குறித்து கேட்ட போது, ‘‘உண்மையில், நான் கட்சி அமைப்பைப் பாராட்டினேன். நீங்கள் விஷயங்களைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். நான் பாஜ, ஆர்எஸ்எஸ்சின் தீவிர எதிர்ப்பாளர். ஆர்எஸ்எஸ், பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு எப்போதும் எதிர்ப்பாளராகவே இருக்கிறேன், இருப்பேன். நாம் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்’’ என்றார். காங்கிரசை தலைகீழாக்கி விட்டார் ராகுல்:

பாஜ: திக்விஜய்சிங் பேச்சு குறித்து பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறுகையில்,’ எங்கள் மோடி ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர். ஆனால் அவர்களின் தலைவர் ராகுல்காந்தி, ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரன். எங்கள் மோடி அடித்தளத்திலிருந்து உச்சிக்கு உயர்ந்ததால், அவர் கட்சியையும் அடித்தளத்திலிருந்து உச்சிக்குக் கொண்டு செல்கிறார்.

அவர்களின் தலைவர் ‘ஜவஹரின் பேரன்’ என்பதால், அவர் இப்போது ‘மேலிருந்து கீழே’ வந்து கொண்டிருக்கிறார். அதனால் அவர் தனது கட்சியையும் தலைகீழாகக் கொண்டு வருகிறார்’ என்றாா். மற்றொரு பாஜ செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் தளத்தில்,’ ராகுல் காந்தியின் கீழ் காங்கிரஸ் அமைப்பு சீர்குலைந்துவிட்டது என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். காங்கிரஸ் vs காங்கிரஸ் வெளிப்படையாகத் தெரிகிறது’ என்றார்.

Tags : Congress ,Working Committee ,Rahul Gandhi ,Modi ,New Delhi ,
× RELATED உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து...