லண்டன்: இங்கிலாந்தில் வசித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆலோசகர் ஷாஜத் அக்பர் வீட்டில் புகுந்து தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு பிரிவு ஆலோசகராகப் பணியாற்றியவர் மிர்சா ஷாஜத் அக்பர். இவர் மீது ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு இங்கிலாந்தில் ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் இவர் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரை மறைமுகமாகச் சாடி, ‘பயங்கரவாதத்தின் மூலம் ஆட்சி செய்ய முயற்சிக்கும் கோழை’ என்று கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பாகிஸ்தான் ராணுவத் தலைமைக்கும், வெளிநாட்டில் வசிக்கும் இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் வசித்து வரும் ஷாஜத் அக்பர் வீட்டில் நேற்று முன்தினம் அழைப்பு மணி ஒலித்துள்ளது. கதவை திறந்ததும் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அவர் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். ஷாஜத் அக்பர் தடுக்க முயன்றபோது அந்த நபர் வெளியேறிவிட்டு, மீண்டும் உள்ளே வந்து அவரை கொடூரமாக தாக்கியதுடன், காயமடைந்த அவரை தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஷாஜத் அக்பரின் மூக்கு மற்றும் தாடை எலும்புகள் உடைந்தன.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கேம்பிரிட்ஜ் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி, இது திட்டமிடப்பட்ட தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
