×

சமீபத்தில் இந்திய பெண் பலியான நிலையில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை: கனடா பல்கலை. வளாகம் அருகே பயங்கரம்

 

டொராண்டோ: கனடாவில் பல்கலைக்கழகம் அருகே இந்திய மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் டொராண்டோ நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிமான்ஷி குரானா என்ற இந்திய வம்சாவளிப் பெண் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், மீண்டும் ஒரு இந்திய மாணவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்தில் மூன்றாம் ஆண்டு அறிவியல் படித்து வந்தவர் ஷிவாங்க் அவஸ்தி (20).

இவர் கடந்த 23ம் தேதி கல்லூரிக்கு அருகே உள்ள ஹைலேண்ட் க்ரீக் ட்ரெயில் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வழிமறித்து துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் படுகாயமடைந்த மாணவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பல்கலைக்கழக வளாகம் உடனடியாக மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்; அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து டொராண்டோவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய மாணவர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது; அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் அப்பகுதியில் போதிய மின்விளக்கு வசதி இல்லை என்றும், பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்தாண்டில் டொராண்டோவில் நடக்கும் 41வது கொலைச் சம்பவம் இதுவாகும்.

Tags : Canada University ,Toronto ,Canada ,Himanshi Khurana ,Toronto, Canada… ,
× RELATED நெஞ்சுவலி சிகிச்சைக்காக 8 மணி நேரம்...