டாக்கா: டாக்காவில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அங்கு அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக்கொலை, போராட்டக்காரர்களால் இந்து இளைஞர் தீபு சந்திரதாஸ் கொடூரமாக அடித்துக்கொலை என அடுத்தடுத்த சம்பவங்களால் வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, 17 ஆண்டுக்கு முன்பு வங்கதேசத்தை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், இன்று நாடு திரும்புகிறார். இவர் மீது ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டது. அதனால் அவர், பிரிட்டனின் லண்டனில் தஞ்சம் புகுந்தார்.
வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் தாரிக் ரஹ்மான் இன்று வங்கதேசம் திரும்புவதால், முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. நேற்று மாலை தலைநகர் டாக்காவில் உள்ள மோக்பஜார் மேம்பாலத்தில் இருந்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது ஒரு மர்ம நபர் வெடிகுண்டை தூக்கி வீசியுள்ளனர். இதில், சைபூல் சையாம் (21) என்ற இளைஞர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவர், அதே பகுதியில் உள்ள ஒரு கார் அலங்கார கடையில் வேலை பார்த்து வந்ததாகவும், தேநீர் அருந்த வெளியே வந்தபோது இந்த குண்டுவீச்சில் சிக்கி பலியானதாகவும் தெரியவந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து ராணுவம் மற்றும் காவல்துறையினர் நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையம், முக்கிய சாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டாக்கா முழுவதும் ”இரட்டை அடுக்கு” பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அடுத்தடுத்த சம்பவங்களால் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால், வங்கதேச போலீசார் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.
