×

2024-25ல் மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு ரூ.289.63 கோடி நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 

சென்னை: 2024-25ல் மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு ரூ.289.63 கோடி நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை நவம்பர் / டிசம்பர் 2024 மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு ரூ.289.63 கோடி நிவரணத் தொகை ஒப்பளிப்பு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில் அரசாணை வெளியிடப்பட்டது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், வேளாண்மைத் துறைக்கு தலையாய இடம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கென 5 தனி நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதோடு, வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை – உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்து, தமிழ்நாட்டின் வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், உழவர்களின் நலன் காக்கவும், “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்”, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்திட “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்”, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்வளத்தினை அறிந்திட “தமிழ் மண் வளம் இணையதளம்”, வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், உழவர் பெருமக்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அதேபோல் எப்போதெல்லாம் இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டி அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை அளித்து வருகிறது.

அந்த வகையில், வடகிழக்குப் பருவ மழை நவம்பர் / டிசம்பர் 2024 மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டபோது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பரப்பினை உறுதிசெய்து, அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து நிவாரணத்தொகை வேண்டி கருத்துரு பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இதன்படி, வேளாண் பயிர்கள் 4.90 இலட்சம் ஏக்கரும், தோட்டக்கலைப்பயிர்கள் 76,132 ஏக்கரும், என மொத்தம்

5.66 இலட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டது என கணக்கிடப்பட்டது. இக்கணக்கெடுப்பின்படி, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக 289.63 கோடி ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 3.60 இலட்சம் விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட 2.80 இலட்சம் வேளாண் பயிர் விவசாயிகளுக்கு 254.38 கோடி ரூபாயும், பாதிக்கப்பட்ட 80,383 தோட்டக்கலைப் பயிர் விவசாயிகளுக்கு 35.25 கோடி ரூபாயும் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED 6100 கிலோ எடைகொண்ட அமெரிக்க...