புதுடெல்லி: நடிகர் மாதவனின் ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவரது அனுமதியின்றி புகைப்படம் மற்றும் குரலை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சமீப காலங்களில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகை ஐஸ்வர்யா ராய் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்க இதேபோன்று நீதிமன்றத்தை நாடித் தீர்வு கண்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் மாதவனின் அனுமதியின்றி அவரது உருவத்தை செயற்கை நுண்ணறிவு மற்றும் ‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி, ‘கேசரி 3’, ‘ஷைத்தான் 2’ போன்ற இல்லாத திரைப்படங்களின் முன்னோட்டக் காட்சிகளைப் போலியாகச் சித்தரித்து சிலர் இணையத்தில் வெளியிட்டு மக்களைத் தவறாக வழிநடத்தியுள்ளனர். மேலும், அவரது உருவம் பொறிக்கப்பட்ட பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், சில இணையதளங்களில் ஆபாசமான காட்சிகளில் அவரது முகம் பயன்படுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக நடிகர் மாதவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா, ‘மாதவனின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான ஆபாசமான மற்றும் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். வணிக நோக்கத்திற்காக அவரது குரல், பாவனைகள் மற்றும் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் திரித்துப் பயன்படுத்துவதற்கும் நீதிமன்றம் கடுமையான தடை விதித்துள்ளது.
அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைப் போலவே மாதவனுக்கும் இந்த இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் தொடர்பான விரிவான சட்டச் சிக்கல்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்’ என்று தெரிவித்த நீதிமன்றம், இவ்வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு ஒத்திவைத்தது.
