சேலம்: மேட்டூர் அணையின் 92 ஆண்டுகால வரலாற்றில் அணையின் நீர்மட்டம் 428 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்து சாதனை படைத்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, திருவாரூர், அரியலூர் பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நடப்பாண்டில் முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை 7 முறை எட்டி நிரம்பியது.
அணை கட்டி முடிக்கப்பட்டு 92 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரே ஆண்டில் 7 முறை முழு கொள்ளவை எட்டியது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து இன்று வரை 428 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100க்கு மேல் நீடித்து சாதனை படைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 695 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் 109.72 அடியும், நீர் இருப்பு 78.01 டி எம்.சி. அணையின் இருந்து காவிரி ஆற்றில் 8,000 கன அடியும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
