×

பாஜவினர் கையில் வைத்துள்ள வேல் வேறு எங்கள் கையில் இருக்கும் வேல் சனாதனத்தை குத்தி கிழிக்கும்: திருமாவளவன் பேட்டி

சென்னை: பாஜவினர் கையில் வைத்துள்ள வேலுக்கும் எங்கள் கையில் உள்ள வேலுக்கும் வேறுபாடு உண்டு. எங்கள் கையில் இருக்கும் வேல் சனாதனத்தை குத்தி கிழிக்கும் என திருமாவளவன் கூறினார். சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளை சேர்ந்த பேராயர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்யின் பேச்சுகள் மற்றும் அணுகுமுறைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. அவர்கள் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் என்ன செயல் திட்டங்களை கொண்டு இயங்கி வருகிறார்களோ அதே செயல் திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வழியில் அல்லது அதனை தூக்கிப் பிடிக்கும் வகையில் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

நீண்ட காலமாக சீமானை கவனித்து வருகிறேன். அவருடை அரசியலை அங்கீகரித்து ஆதரித்து வருபவன் நான். ஆனால் சமீபத்தில் அவரின் பேச்சு பெரியாருக்கு எதிராகவும் சமூகநீதி அரசியலை தகர்க்கும் வகையிலும், பார்ப்பன கடப்பாரையை கொண்டு திராவிட இருப்பை தகர்ப்பேன் என்று கூறுவது அரசியல் கட்சிகளுக்கு எதிரான கருத்துகள் போல் தெரியவில்லை, திமுக என்ற அரசியல் கட்சியை அவர் எதிர்க்கலாம்.

அரசியல் கட்சிக்கு எதிராக பேசப்படும் கருத்துகளுக்கு எங்களுக்கு முரண்பாடு கிடையாது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேச்சு அவருடைய எதிர்கால திட்டங்கள் அல்லது தமிழக மக்களின் நலன் அவர் உள்வாங்கியுள்ள தலைவர்களின் கருத்தியல் குறித்து எந்த மேடையிலும் இதுவரை பேசியதில்லை. ஒரு கட்சி மீதான வெறுப்பு மட்டும் தான் பேசி வருகிறார். இது பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்சின் செயல் திட்டமாகும்.

பாஜவினர் கையில் வைத்துள்ள வேலுக்கும் நாங்கள் கையில் எடுத்துள்ள வேலுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளது. அவர்கள் சனாதனத்தை அடிப்படையாக கொண்டது. நாங்கள் கையில் ஏந்தி உள்ள வேலாயுதம் என்பது சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டது. எங்கள் வேல் சனாதனத்தை குத்தி கிழிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BJP ,Thirumavalavan ,Chennai ,Vepery, Chennai ,Christian… ,
× RELATED தென்னிந்தியாவிலேயே நேற்று அதிக...