மவுன்ட் மவுன்கனுய்: நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடந்தது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது போட்டியில் நியூசிலாந்து வென்றது. 3வது மற்றும் கடைசி டெஸ்ட் மவுன்ட் மவுன்கனுய் மைதானத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 575 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. கான்வே 227, கேப்டன் லாதம் 137 ரன் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 420 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கவேம் ஹாட்ஜ் நாட் அவுட்டாக 123 ரன் அடித்தார். நியூசிலாந்து பவுலிங்கில் ஜேக்கப் டஃபி 4, அஜாஸ் பட்டேல் 3 விக்கெட் எடுத்தனர். பின்னர் 155 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே, கேப்டன் டாம் லதாம் சதம் விளாசினர். கான்வே 100, டாம் லாதம் 101 ரன் அடித்து அவுட் ஆகினர்.
இங்கிலாந்து 54 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 462 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்றைய 4ம்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன் எடுத்திருந்தது. 5வது மற்றும் கடைசி நாளான இன்று பிராண்டன் கிங் 67, ஜான் காம்ப்பெல் 16, ரன்னில் அவுட் ஆகினர். பின்னர் வந்த கவேம் ஹாட்ஜ் 0, ஷாய் ஹோப் 3, அலிக் அதனேஸ் 2, ஜஸ்டின் க்ரீவ்ஸ் 0, கேப்டன் ரோஸ்டன் சேஸ் 5, கேம் ரோச் 4 என ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினர். ஆண்டர்சன் பிலிப் 10 ரன் எடுத்தார். கடைசி விக்கெட்டாக ஜெய்டன் சீல்ஸ் டக்அவுட் ஆனார். 80.3 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் 138 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 323 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றிபெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது. பவுலிங்கில் ஜேக்கப் டஃபி 4, அஜாஸ் பட்டேல் 3, மிட்செல் ரே 2 விக்கெட் எடுத்தனர். முதல் இன்னிங்சில் 227, 2வது இன்னிங்சில் 100 ரன் அடித்த கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார். ஜேக்கப் டஃபி (23 விக்கெட், 42 ரன்) தொடர் நாயகன் விருது பெற்றார்.
