×

ACC தலைவர் நக்வியை மீண்டும் புறக்கணித்த இந்திய அணி: ஆசியக் கோப்பை மேடையில் பரபரப்பு!

துபாய்: 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து பதக்கங்களைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதையடுத்து இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிக்கு பதக்கங்கள் வழங்க அழைக்கப்பட்டபோது, வீரர்கள் மேடைக்குச் செல்லவில்லை.

ACC தலைவர் மொஹ்சின் நக்வியின் கைகளால் பதக்கம் பெற விரும்பாத இந்திய வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) இணை உறுப்பினர் இயக்குனர் முபஷிர் உஸ்மானியிடமிருந்து தங்களது பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர். நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும், அந்நாட்டு உள்துறை அமைச்சராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி நக்வியை புறக்கணிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே நடந்த சீனியர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, அவரிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்தது. அப்போது நக்வி அடம் பிடித்து கோப்பையைத் தர மறுத்ததோடு, அதைத் தன்னுடன் எடுத்துச் சென்றார்.

நக்வியின் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் பதற்றம் காரணமாகவே பிசிசிஐ (BCCI) இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.

Tags : ACC ,president ,Naqvi ,Asian Cup ,Dubai ,Asian Cricket Council ,Mohsin Naqvi ,U-19 Asian Cup ,Pakistan ,
× RELATED சென்னையில் தங்கம் விலை இன்று இரண்டு...