சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை – நாகர்கோவிலுக்கு ரூ.4,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வழக்கமாக ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.4,300, சென்னை – மதுரைக்கு ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை – சேலத்துக்கு ஆம்னி பேருந்துகளில் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டண உயர்வு காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அரசு ஆம்னி பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
