சென்னை: தமிழகத்தில் கடுங்குளிர் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியபோது நல்ல மழை பெய்தது. அதன்பிறகு, பெரிதாக மழை பொழிவு என்பது இல்லை. இதை தொடர்ந்து, டிட்வா புயல் காரமணாக, வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதன்பிறகு அளவில் மழை இல்லை. டிசம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஆனால், கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும், சென்னையிலும் காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் குளிர்ந்து காணப்படுகிறது.
அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த வானிலை நிலை உருவாகியுள்ளது. வரும் 24ம்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஆனால் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்பட வாய்ப்பு உள்ளது. 25ம்தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும். அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
டிசம்பர் 26 மற்றும் 27ம்தேதிகளில் கடலோர தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று, வரும் 25ம்தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிதான மாற்றம் இருக்காது. இருப்பினும், ஒருசில பகுதிகளில் சற்றே குளிர்ச்சி அதிகரிக்கலாம். இன்று நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் ஏற்படலாம். தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 65 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்று மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
