×

விசாகப்பட்டினத்தில் இன்று இந்தியா-இலங்கை மகளிர் அணிகள்: முதல் டி.20 போட்டியில் மோதல்

 

விசாகப்பட்டினம்: இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டி.20 தொடரில் ஆடுகிறது. இதில் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, ஷபாலி வர்மா, ரிச்சாகோஷ் அமன்ஜோத் கவுர் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் ரேனுகாசிங், சரணி, சினே ராணா, கிராந்தி கவுட் வலு சேர்க்கின்றனர்.

கடந்த மாதம் 50 ஓவர் உலக கோப்பையை வென்ற பின்னர் இந்தியா களம் இறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.மறுபுறம் சாமரி அட்டப்பட்டு தலைமையிலான தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள இலங்கை அணி 3வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு சவால் கொடுக்க கடுமையாக போராட வேண்டி இருக்கும். இரு அணிகளும் இதற்கு முன் 26 டி.20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 20ல் இந்தியா, 5ல் இலங்கை வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போாட்டியில் இந்தியா 4-1 என முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கூறுகையில், 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இறுதி இலக்கு. அந்தப் பயணம் நாளை (இன்று) முதல் தொடங்குகிறது. விசாகப்பட்டினம் மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் நன்றாக உள்ளது. பனி மிகப்பெரிய பங்கை வகிக்கப் போகிறது. உலகக் கோப்பை போட்டிகளை இங்கு விளையாடினோம். இதனால் ஆடுகளம் எப்படி இருக்கும் என எங்களுக்கு தெரியும், என்றார். 2வது போட்டி இதே மைதானத்தில் 23ம்தேதி நடக்கிறது. 3, 4, 5வது போட்டிகள் முறையே 26, 28, 30ம் தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

Tags : India ,Sri Lanka ,Visakhapatnam ,women's ,team ,T20 ,Harmanpreet Kaur ,
× RELATED தவெக நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...