புதுடெல்லி: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக, விண்கலத்தைத் தரையிறக்குவதற்கான பாராசூட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வரும் 2027ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தின் மூலம் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பி, அவர்களைப் பத்திரமாக பூமிக்குத் திரும்ப அழைத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், விண்கலத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பல்வேறு கட்டச் சோதனைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விண்வெளிக்குச் சென்று திரும்பும் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்துத் தரையிறக்குவதற்கு உதவும் ‘ட்ரோக்’ வகை பாராசூட் சோதனைகள் சண்டிகரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. சண்டிகரில் உள்ள டிஆர்டிஓ-வின் முனையப் பல்லியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில், ரயில் தடத்தில் ராக்கெட் வேகத்தில் இயங்கும் பனிச்சறுக்கு போன்ற அமைப்பில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் டிஆர்டிஓ ஆகியவை இணைந்து நடத்திய இந்தச் சோதனையில், பாராசூட்களின் செயல்பாடு மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டது.
ககன்யான் விண்கலத்தில் மொத்தம் 10 பாராசூட்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்றும், அதில் விண்கலத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் 2 ட்ரோக் பாராசூட்கள் மிக முக்கியமானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிவேகத்தில் விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது, அதன் வேகத்தைக் குறைத்து வீரர்கள் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கு இந்தச் சோதனை மிக முக்கியப் பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
