×

கருத்தடை சாதனங்கள் மீதான 18% வரி தொடரும் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ‘ஐஎம்எப்’: மக்கள் தொகை பெருக்கத்தால் கடும் நெருக்கடி

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 2.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் குழந்தைகள் பிறப்பதால், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது. இந்நிலையில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஏழை எளிய மக்களும் வாங்கும் வகையில் ஆணுறை மற்றும் கருத்தடை சாதனங்கள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் எனப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) கோரிக்கை விடுத்திருந்தது.

அத்தியாவசியமான சுகாதாரப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது, அவற்றை ஆடம்பரப் பொருட்களாக மாற்றிவிடுவதால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் இந்தக் கோரிக்கையை ஐஎம்எப் அதிகாரிகள் தற்போது திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர். தற்போது 7 பில்லியன் டாலர் கடன் உதவித் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் இயங்கி வருவதால், ‘நிதி ஆண்டின் இடையில் வரிச் சலுகைகளை வழங்க முடியாது; இதுகுறித்து 2026-27 பட்ஜெட்டின் போது மட்டுமே விவாதிக்க முடியும்’ என ஐஎம்எப் நிபந்தனை விதித்துள்ளது.

இந்த வரி விலக்கை அளித்தால் அரசுக்கு சுமார் 60 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை எட்ட முடியாமல் போகும் என்றும் ஐஎம்எப் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இதே காரணத்தைக் கூறி சானிட்டரி நேப்கின் மற்றும் குழந்தைகளின் டயப்பர்களுக்கான வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐஎம்எப் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : IMF ,Pakistan ,Islamabad ,
× RELATED பல்கலைகழக துப்பாக்கிசூடு எதிரொலி:...