×

‘இன்குலாப் மஞ்சா’ அமைப்பின் நிர்வாகி படுகொலை எதிரொலி வங்கதேசத்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: பத்திரிகை ஆபீஸ்களுக்கு தீ வைப்பு; வன்முறை கும்பல் அட்டூழியம்

 

டாக்கா: டாக்காவில் சுடப்பட்ட இளைஞர் அமைப்பு தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைப்பு, இந்திய தூதரகம் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதால், வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வங்கதேசத்தில் ‘இன்குலாப் மஞ்சா’ என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், டாக்கா-8 தொகுதியின் சுயேச்சை வேட்பாளருமான ஷெரீப் உஸ்மான் ஹாதி (32), கடந்த 12ம் தேதி பிஜாய்நகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

தலையில் குண்டடி பட்டு படுகாயமடைந்த அவர் டாக்காவில் முதலுதவிக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு 6 நாட்களாக உயிருக்கு போராடி வந்த ஹாதி, மூளை மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா ஆட்சியை அகற்றுவதற்காக 2024ல் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய தீவிர இந்தியா எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர் ஆவார்.

ஹாதியின் மரண செய்தி வெளியானதும் டாக்கா பல்கலைக்கழகம் அருகே ஷாபாக் பகுதியில் நள்ளிரவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த கும்பல் பிரபல நாளிதழ்களான ‘பிரதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகிய பத்திரிகை அலுவலகங்களை அடித்து நொறுக்கி தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிட்டகாங், ராஜசாகி ஆகிய இடங்களில் இந்தியத் தூதரகங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள், ராஜஷாஹி நகரில் வங்கதேச தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லம் மற்றும் அவாமி லீக் கட்சி அலுவலகத்திற்கும் தீ வைத்தனர்.

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குல்ஷி போலீசார், போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன், பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். ஹாதியின் மரணத்தைத் தொடர்ந்து டாக்கா உள்ளிட்ட இடங்களிலும் பத்திரிகை அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், தூதரகங்கள் மீதான இந்தத் தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

பாதுகாப்பு கருதி ராஜ்ஷாஹி மற்றும் குல்னாவில் விசா மையங்களை இந்தியா தற்காலிகமாக மூடியுள்ளதுடன், தூதரகப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்கதேச அரசுக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த படுகொலைக்கு பின்னால் ‘பாசிச சக்திகள்’ மற்றும் இந்தியா இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள போராட்டக்காரர்கள், ‘இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்’ என்றும், ‘அவாமி லீக் கட்சியை தடை செய்ய வேண்டும்’ என்றும் முழக்கங்களை எழுப்பி வருவதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தொலைக்காட்சியில் உரையாற்றிய வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், ‘ஹாதியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு’ எனக் கவலை தெரிவித்துள்ளார். ‘பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்ட அவர், ‘சனிக்கிழமை (நாளை) தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும்; குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். தேர்தல் நடைமுறைகளைச் சீர்குலைக்கவே இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசத்தில் வன்முறை பரவி வருவதால் வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஹாதி மீதான தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகப் பரப்பப்படும் வதந்திகளை இந்தியா முற்றிலுமாக மறுத்துள்ளது. இதனிடையே வன்முறையைக் கட்டுப்படுத்தக் கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் முக்கிய நகரங்களில் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Tags : INDIAN EMBASSY ,BANGLADESH ,INCULAB MANJHA ,Dhaka ,Indian ,
× RELATED அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து...