×

பொள்ளாச்சியில் பரபரப்பு போதை மாத்திரை, ஊசி விற்பனையில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது

*போலீசார் தீவிர விசாரணை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் போதை மாத்திரை, ஊசி விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, போதை ஊசி மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சிலரை, போலீசார் கண்டறிந்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் அவ்வப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியில் மீண்டும் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கிழக்கு ஸ்டேஷன் போலீசார், போதை ஊசி மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுபவர்களையும், அதனை பயன்படுத்துவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க களம் இறங்கினர்.

இதில் கோட்டூர் ரோடு மேம்பாலம் கீழ்பகுதியில் சிலர் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பதுக்கி வைத்து வெளியாட்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது.

நேற்று சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் மீனா குமாரி, எஸ்.ஐ விக்னேஷ் மற்றும் போலீசார் விரைந்து கும்பலை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த போதைப்பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

மேலும் போதை கும்பல் பதுக்கி வைத்திருந்த பையை திறந்து பார்க்கும்போது அதில், 106 போதை மாத்திரைகளும், மூன்று சிரஞ்ச்களும் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அதனை பறிமுதல் செய்த போலீசார், அதற்கு தொடர்புடைய 5 பேரையும் பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.

போலீசார் தீவிர விசாரணையில் அவர்கள், கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த நவீன் நேரு (24), பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆகாஷ் (24), நல்லெட்டிப்பாளையத்தை சேர்ந்த பிரபு (29), ஜோதி நகரை சேர்ந்த பவுன்ராஜ் (25), பாலக்காடு ரோட்டை சேர்ந்த ஹரி பிரசாத் (27) என தெரிய வந்தது.

அவர்கள், வெளியூர்களில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி ஊரக பகுதியில் சிலருக்கு தொலைபேசி மூலமாகவும், நேரடியாக வரவழைத்தும் அவர்களுக்கு சப்ளை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் நேற்று கைது செய்தனர்.

Tags : Pollachi ,Coimbatore ,
× RELATED உதவி ஹெச்.எம் ஆசிரியையின் அந்தரங்க...