×

நெல்லை அருகே கணவர் கண் முன்னே அசாம் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 2 இளம்சிறார் உள்பட 3 பேர் கைது

ஸ்ரீவைகுண்டம்: நெல்லை அருகே சிவந்திபட்டியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணை கணவர் கண்முன்னே கூட்டுப் பலாத்காரம் செய்தது தொடர்பாக அதே மாநிலத்தைச் சேர்ந்த 2 இளம் சிறார்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா சேரகுளம் அருகே அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் 2 வாரங்களுக்கு முன் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர். நெல்லையில் வசித்து வரும் அசாமை சேர்ந்த முகமது மஹ்புல் ஹூசைன் (27) என்பவர், ஹாலோ பிளாக் நிறுவன உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு இவர்களை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் போதாது என்பதாலும் அவர்கள் வேலையில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர்.

பின்னர் தம்பதியர் கேரள மாநிலத்திற்கு வேலைக்குச் செல்ல முடிவு செய்தனர். இதற்காக அரசர்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட முகமது மஹ்புல் ஹூசைன், அரசர்குளத்திலேயே வேலை செய்யுமாறு மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கூறிய அவர், பைக்கில் அசாமைச் சேர்ந்த 2 இளம் சிறார்களுடன் சிவந்திப்பட்டி பகுதியில் நின்றுள்ளார். ஆட்டோ அங்கு வந்ததும் தம்பதி, கல் குவாரியில் இருந்து பணத்தை திருடி விட்டதாக டிரைவரிடம் கூறி இருவரையும் இறக்கி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு பெண்ணின் கணவரை மூவரும் சரமாரியாக தாக்கி, அவர் கண் எதிரிலேயே அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பல மணி நேரத்திற்கு பின் இருவரையும் மெயின் ரோட்டுக்கு கொண்டு வந்து விட்டு விட்டு தப்பிவிட்டனர். பாதிக்கப்பட்ட அந்த பெண், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முகமது மஹ்புல் ஹூசைன் மற்றும் 2 அசாமைச் சேர்ந்த இளம் சிறார்களையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி மஹ்புல் ஹூசைனை பாளை சிறையிலும், இளம் சிறார்களை சிறுவர் கூர் நோக்கு இல்லத்திலும் அடைத்தனர். கணவர் கண் எதிரிலேயே அசாம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Assam ,Nella ,Srivaikundam ,Sivanthabadi ,Thoothukudi District ,Taluga Serakulam ,
× RELATED ரயில் பயணிகளின் உடைமைகளை திருடிய 4 பேர் கைது