சத்தியமங்கலம், டிச.16: திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ஆசனூர் மலைப்பகுதியில் இருந்து மக்காச்சோள தட்டு பாரம் ஏற்றிய லாரி கோவை மாவட்டம் காரமடை செல்வதற்காக நேற்று மதியம் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. லாரியை சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் பகுதியை சேர்ந்த டிரைவர் தங்கவேல் (42), ஓட்டினார்.
26வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டு இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினார். லாரி சாலையோரம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
