×

டபிள்யுடிசி புள்ளி பட்டியல் 6வது இடத்துக்கு சரிந்த இந்தியா: நியூசி. 3ம் இடத்துக்கு தாவியது

லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அட்டகாச வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 66 சதவீத வெற்றிகளுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. 2வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை, 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபாரமாக வென்றது. மகத்தான இந்த வெற்றியை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) புள்ளிப் பட்டியலில் 6ம் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 66.67 சதவீத வெற்றிகள் பெற்று, 16 புள்ளிகளுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

நியூசிலாந்தின் உயர்வால், 5ம் இடத்தில் இருந்த இந்தியா, ஒரு நிலை தாழ்ந்து 6ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. டபிள்யுடிசி போட்டிகளில் இந்தியா இதுவரை 9 டெஸ்ட் போட்டிகள் ஆடி 4ல் வெற்றி, 4ல் தோல்வி, ஒரு போட்டியில் டிரா பெற்றுள்ளது. இப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி, 5 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் (100 சதவீதம்), 60 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. இந்திய அணியை 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வென்று 2-0 என்ற புள்ளிக் கணக்கில் தொடரை கைப்பற்றிய தென் ஆப்ரிக்கா அணி, 2ம் இடத்தில் உள்ளது. டபிள்யுடிசி புள்ளிப் பட்டியலில் இலங்கை 4, பாகிஸ்தான் 5, இங்கிலாந்து 7, வங்கதேசம் 8, வெஸ்ட் இண்டீஸ் 9வது இடங்களில் உள்ளன.

Tags : India ,WTC ,New Zealand ,London ,West Indies ,World Test Championship ,New Zealand… ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...