×

ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: உன்னதி, இஷாராணி செமிபைனலுக்கு தகுதி

கட்டாக்: ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியில் நேற்று இந்தியாவை சேர்ந்த உன்னதி ஹூடா, இஷாராணி பருவா, கிரண் ஜார்ஜ், ரூனக் சவுகான் சிறப்பாக ஆடி, அரை இறுதிக்குள் நுழைந்தனர். ஒடிசாவின் கட்டாக் நகரில், ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த, போட்டியின் 2ம் நிலை வீரர் கிரண் ஜார்ஜ், சக இந்திய வீரர் ரித்விக் சஞ்சீவியுடன் மோதினார். 33 நிமிடங்கள் மட்டுமே நடந்த இப்போட்டியில், கிரண், 21-11, 21-17 என்ற நேர் செட் கணக்கில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரூனக் சவுகான், சங்கர் முத்துசாமி சுப்ரமணியன் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரூனக், 21-19, 22-20 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடினார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் தருண் மன்னெபள்ளியை, 21-9, 22-20 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியா வீரர் முகம்மது யூசப் வெற்றி கண்டார். மகளிர் பிரிவு காலிறுதியில், இந்திய வீராங்கனை தான்யா ஹேமந்த், உலகக் கோப்பை ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சக இந்திய வீராங்கனை தன்வி சர்மாவை, 21-18, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு மகளிர் பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை இஷாராணி பருவா, சக இந்திய வீராங்கனை அன்மோல் கார்பை, 21-16, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இந்தியாவை சேர்ந்த, போட்டியின் முதல் நிலை வீராங்கனை உன்னதி ஹூடா, சக இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயாவை 21-16, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வென்று செமிபைனலுக்கு தகுதி பெற்றார்.

Tags : Odisha Masters Badminton ,Unnathi ,Isharani ,Cuttack ,Unnathi Hooda ,Isharani Barua ,Kiran George ,Runak Chauhan ,India ,Cuttack, Odisha.… ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...