விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?.. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஏர்வாடி: தளபதிசமுத்திரம் நான்கு வழிச்சாலையில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் நான்குநேரி, வள்ளியூர் ஆகிய நகரங்களுக்கு  இடையே தளபதிசமுத்திரம் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் பகுதிகளில் தளபதி சமுத்திரம் ஒன்றாகும். இந்த ஊரை சுற்றி கண்ணநல்லுர், துலுக்கர்பட்டி, பெருமளஞ்சி, சின்னம்மாள்புரம், சிறுமளஞ்சி, ஆச்சியூர் உட்பட பல கிராமங்கள்   சுற்றி உள்ளன.

இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தளபதி சமுத்திரம் நான்குவழிச்சாலையை கடந்து தான் வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தளபதிசமுத்திரம் மேலூர் மற்றும் கீழூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து பஸ் நிறுத்தங்கள் உள்ளன. எனவே, தினமும் காலை, மாலை வேளைகளில்  நான்கு வழிச் சாலையில் கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு செல்லும் போது நான்குவழிச்சாலையில் சில நேரங்களில் நடந்து செல்வோர் மீதும், வாகனங்கள் மீதும் மோதி அவ்வபோது விபத்து ஏற்படுகிறது.

இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், தினமும் சிறு, சிறு விபத்துக்கள் நடப்பது தொடர்

கதையாகி வருகிது. எனவே பணகுடி, பொன்னாகுடி 4 வழிச்சாலையில் மேம்பாலம் அமைத்தது போன்றும்,  இப்பகுதியில் மேம்பாலம் அமைத்தால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் சுற்றுவட்டார மக்கள் காலை, மாலை நேரங்களில் சாலையின் குறுக்கே கடந்து செல்ல வேண்டி உள்ளது.

அந்த சமயத்தில் தொலை தூரங்களில் இருந்து வரும் வாகனங்கள் தளபதிசமுத்திரத்தை கடக்கும் போது அதிவேகமாக செல்வதால் சாலையை கடந்து செல்வோர் மீதும், வாகனங்கள் மீதும் மோதுவதால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரையில் வாகனங்கள் குறுக்கே செல்லும் இடத்தில் தற்காலிகமாக பேரிகாட் அமைக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: