சதுரகிரி கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாள் அனுமதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் இக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஐப்பசி அமாவாசை மற்றும் பவுர்ணமி, கார்த்திகை அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக கோயிலில் தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நாளை (டிச.5) முதல் டிச.8ம் தேதி வரை 4 நாட்களுக்கு, பக்தர்கள் சதுரகிரி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதன்படி நாளை கார்த்திகை மாத பிரதோஷம் என்பதால் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. அபிஷேகம் முடிந்ததும் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. டிச.7ம் தேதி கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. இதற்கிடையே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: