முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் குஜராத்தில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: நாளை மாலை கருத்துக்கணிப்பு ரிசல்ட்; 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை

அகமதாபாத்: குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் நாளை இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் நாளை மாலை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவும், வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவும் வெளியாகிறது.

குஜராத்தில் 182 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபைக்கு முதல் கட்டமாக கடந்த 1ம் தேதி 89 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 63.31 சதவீத வாக்குகள் பதிவானது. சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாக இருந்தது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது 14 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்திருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் சுட்டிக் காட்டின.

குஜராத்தில் மீதமுள்ள 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 93 ெதாகுதிகளில் 2ம் கட்ட மற்றும் இறுதிகட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அங்கு நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் சுமார் 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்களும் கடந்த சில வாரங்களாக மேற்கண்ட தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே நாளைய வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களை நேற்று முதல் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வருகிறது. முதல்வர் பூபேந்திர படேல், படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர் ஹர்திக் படேல் (பாஜக) உள்ளிட்டோர் நாளைய தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.

தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்கும் வகையில் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், ‘கடந்த 1ம் தேதி நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தலில் நகரங்களில் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தது. இதை ஈடுகட்டும் வகையில் 2வது கட்ட தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் மெயின்புரி எம்பி தொகுதி, பிற மாநிலங்களில் 6 எம்எல்ஏ தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நாளை நடக்கிறது என்பதால், அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாளையுடன் குஜராத் தேர்தல் முடிவுக்கு வருவதால், ஏற்கனவே நடந்து முடிந்த இமாச்சல் பிரதேச தேர்தல், நாளை நடக்கும் இடைத்தேர்தல் ஆகியற்றிற்கான முடிவுகள் வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அன்றைய தினம் இரு மாநிலங்களிலும் எந்த கட்சி ஆட்சியமைக்க போகிறது என்பது தெரிந்துவிடும். தற்போது இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், இந்த தேர்தல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதுதவிர நாளையுடன் 2 மாநில வாக்குப்பதிவு நடைமுறைகள் முடிவடைவதால், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நாளை மாலை 5 மணிக்கு மேல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: