பாஜவின் கொட்டத்தை அடக்கும் வீரபூமி தமிழகம்; திருப்பூரில் வைகோ பேச்சு

திருப்பூர்: பாஜவின் கொட்டத்தை அடக்கும் வீரபூமி தமிழகம் என்று திருப்பூரில் வைகோ பேசினார். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பங்கேற்று பேசியதாவது: பாஜ அரசு சனாதன அரசாக, இந்துத்துவா கொள்கையை திணிக்கின்ற அரசாக உள்ளது. ஒரே மொழி, ஒரே நாடு என்பதை திணிக்கிறது. அனைத்து மதம் மற்றும் மொழிக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால், மத வெறியோடு சனாதன அரசு, இந்தி மொழியை எப்படியாவது திணித்து விட வேண்டும் என நினைக்கிறது. நரேந்திர மோடி மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை. அம்பானி மற்றும் அதானி போன்றவர்களுக்காக ஆட்சி நடத்துகிறாார்.

இப்படிப்பட்ட ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருப்பூரில் சபதம் எடுப்பது தான் பொருத்தமாக இருக்கும். இது தியாக பூமி, ரத்தம் சிந்திய பூமி. திருப்பூரில் நாம் எடுத்துக் கொள்ளும் உறுதி என்பது சனாதன சக்திகளை, ஒரே மொழி என்று கூறுபவர்களை முறியடிக்க எடுத்துக் கொள்ளும் உறுதியாகும். திமுக தலைமையில் ஒன்றாக இணைந்திருக்கிறோம். ஒருவரோடு ஒருவர் தோள் கொடுத்திருக்கிறோம். தோள் கொடுக்கும் தோழமை தொடர்ந்து வளரும். பாஜ எங்கு வளர்ந்தாலும், தமிழகத்திலும், கேரளாவிலும் அவர்கள் வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். நடந்து முடிந்த தேர்தல்கள் மட்டுமல்ல, வருகிற தேர்தல்களிலும் அவர்களின் ஆட்டத்தையும், கொட்டத்தையும் அடக்குகின்ற வீரபூமியாக தமிழகம் விளங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: