பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை: மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காணொலி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!!!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், ஒருபுறம் கூட்டணி; மறுபுறம் தொகுதி பங்கீடு என அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். திமுக சார்பில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட திமுக தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நாளை (05-03-2021, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மார்ச் 7-ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Related Stories:

>