×

சாமியாராக மாறிய மம்தா குல்கர்னியின் மடாதிபதி பதவி பறிப்பு

பிரயாக்ராஜ்: பிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் ஷோபா சந்திரசேகரன் இயக்கிய ‘நண்பர்கள்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவருமான மம்தா குல்கர்னி, தற்போது ஆன்மிகத்தில் தீவிரமாக ஈடுபட்டு, யமாய் மம்தா நந்த் கிரி என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். கடந்த 2025ல் நடந்த மகா கும்பமேளாவின் போது, உ.பியில் உள்ள கின்னார் அகாராவின் மகாமண்டலேஸ்வராக (மடாதிபதி) நியமிக்கப்பட்டார்.

எனினும், அந்த அமைப்புக்குள் ஏற்பட்ட பூசல் மற்றும் நிதி தொடர்பான புகார்கள் காரணமாக கடந்த 2025 பிப்ரவரியில் அவர் பதவி விலகினார். பிறகு சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மீண்டும் அந்த அமைப்பில் அவர் சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர், தற்போது மீண்டும் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக சொல்லி, அந்த அமைப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

நடப்பாண்டில் மாக் மேளா சங்கமம் படித்துறையில் குளிப்பது தொடர்பான விவகாரத்தில், சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு, பல்லக்கில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதுகுறித்து கடந்த 25ம் தேதி கருத்து தெரிவித்த மம்தா குல்கர்னி, ‘சங்கராச்சாரியாரை நியமித்தது யார்? கூட்ட நெரிசலில் பல்லக்கில் செல்ல அடம்பிடிப்பது ஏன்? அவரது பிடிவாதத்தால் சீடர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவரது பேச்சு கின்னார் அகாரா விதிகளை மீறியதாக இருந்ததால், மம்தா குல்கர்னியை அந்த அமைப்பில் இருந்து நீக்குவதாக கின்னார் அகாரா தலைவர் லக்ஷ்மி நாராயண் திரிபாதி உறுதி செய்தார். இனிமேல் மம்தா குல்கர்னிக்கும், அந்த அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். இது ஆன்மிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mamta Kulkarni ,Bollywood ,Shobha Chandrasekaran ,Yamai Mamta Nand Giri ,Maha Kumbh Mela ,Mahamandaleshwar ,Kinnaur Akhara ,UP ,
× RELATED ஹாலிவுட்டிலும் இதே நிலையா? நடிகைகளை...