
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியாவில் இருந்து சிறந்த படங்கள் தேர்வு செய்து அனுப்பி வைக்கப்படும். அந்தவகையில், 98வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 15ம் தேதி நடக்கிறது. இந்தியாவில் இருந்து 4 திரைப்படங்கள் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தமிழ் படமும் இடம்பெற்றுள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படம் தேர்வாகி இருக்கிறது. வறுமையின் காரணமாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழையும் குடும்பத்தை சுற்றி நடக்கும் கதையை காமெடி கலந்து சொல்லியிருந்தனர்.
குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், பிறகு ரூ.90 கோடிக்கு மேல் வசூலித்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டு வெளியான படம், ‘காந்தாரா: சாப்டர் 1’. கரண் காந்தாரி இயக்கத்தில் ராதிகா ஆப்தே நடித்து வெளியான ‘சிஸ்டர் மிட்நைட்’ என்ற இந்தி படம், இந்தியில் நடிகர் அனுபம் கெர் இயக்கத்தில் வெளியான ‘தன்வி தி கிரேட்’ ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனிமேஷன் படங்கள் பிரிவில், அஸ்வின் குமார் இயக்கத்தில் ரிலீசான ‘மஹாவதார் நரசிம்மா’ என்ற புராணக்கதை கொண்ட படம் தேர்வாகியுள்ளது.
இதில், நீரஜ் கய்வான் இயக்கிய ‘ஹோம்பவுண்ட்’ என்ற படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்படங்கள் அடுத்தடுத்த சுற்றுக்கு அனுப்பப்பட்டு, இறுதிச்சுற்றில் வெற்றிபெற்ற படம் அறிவிக்கப்படும். இதில் ஏதேனும் ஒரு படத்துக்காவது ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

