×

மண்ணும், மக்களும்தான் படத்தின் கதாநாயகன்: சிவகார்த்திகேயன்

சென்னை: டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, ராணா டகுபதி, பசில் ஜோசப், சேத்தன் நடித்துள்ள மிகப் பிரமாண்டமான படம், ‘பராசக்தி’. இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார். முன்னதாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘பராசக்தி உலகம்’ என்ற கண்காட்சி நடத்தப்பட்டது. அதை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பிறகு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இந்நிலை யில், திருச்சியில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது: கடந்த 1965ல் கதை நடக்கிறது. நமது மண்ணுக்காகவும் மற்றும் மொழிக்காகவும் தங்கள் உயிரையே இழந்தவர்களின் உண்மை கதை இது. அதனால்தான் இத்தனை நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறோம். எனது தம்பியாக, தம்பிதுரை என்ற வேடத்தில் அதர்வா முரளி நடித்திருக்கிறார். இப்போது அவர் எனது உண்மை தம்பியாகவே மாறிவிட்டார். ரத்னமாலா என்ற புரட்சிப் பெண்ணாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். என் பாயின்ட் ஆஃப் வியூவில் ரவி மோகன் வில்லன். அவரது பாயின்ட் ஆஃப் வியூவில் நான் வில்லன். 35 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருக்கும் ரவி மோகன், இதில் பவர்ஃபுல் வில்லனாக நடித்துள்ளார். ஸ்டைலிஷ் வில்லனாக இல்லாமல், கொடூர வில்லனாக அசத்தியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள 100வது படம், நான் நடித்துள்ள 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்ணும், மக்களும்தான் படத்தின் ஹீரோ. அவர்களுக்கான மரியாதையை செலுத்தும் கதை இது. பெரியவர்கள் நமது வரலாற்றை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும். ஒவ்வொரு படமும் ரிலீசாவதற்கு முன்பு ஒருவித டென்ஷன் ஏற்படுவது வழக்கம். மக்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்போம். இப்படத்தை மக்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நெகட்டிவிட்டியை தவிர்த்துவிடுங்கள். சிலர் சோஷியல் மீடியாவில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். நல்ல விஷயங்கள் மரம் மாதிரி மெதுவாக வளரும். ஆனால், அந்த மரம் நல்ல விஷயங்களையே தரும். நீங்களும் நல்லதை மட்டும் கொடுங்கள். எல்லோரும் சேர்ந்து ஓடுவோம், சேர்ந்து ஜெயிப்போம். கவலை இருந்தால் எதை பற்றியும் யோசிக்காதீர்கள். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

Tags : Sivakarthikeyan ,Chennai ,Akash Baskaran ,Don Pictures ,Sudha Kongara ,Ravi Mohan ,Atharva Murali ,Srileela ,Rana Daggubati ,Basil Joseph ,Chethan ,Inban ,Red Giant Movies ,Ulagam ,Valluvar Kottam, Chennai ,
× RELATED நாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்...