சென்னை: ‘ஈழத்து மெல்லிசை மன்னர்’ எம்.பி.பரமேஷ், தனது தந்தை தமிழறிஞர் பீதாம்பரம் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். அதற்காகவும், அவரது 60 வருட இசைப் பயணத்துக்காகவும் சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதை அவரது மகளும், இலங்கையின் முதல் தமிழ் பெண் இசை அமைப்பாளருமான பிரபாலினி பிரபாகரன் நடத்தினார். விழாவில் திருச்சி சிவா எம்.பி., இயக்குனர் சீனு ராமசாமி கலந்துகொண்டனர். அப்போது திருச்சி சிவா, ‘கொடிமலர்’ என்ற படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.பி.னிவாஸ் பாடிய ‘மவுனமே பார்வையால்’ என்ற பாடலை பாடி அசத்தினார்.
பிறகு அவர் பேசியதாவது:
60 வருட காலம் கலையுலகில், அதுவும் இசைத்துறையில் நிலைத்து நிற்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல, அது ஒரு தவம். எம்.பி.பரமேஷ் தனது இசையால் தன்னுடைய காதலி சிவமாலினியின் மனதை களவெடுத்த கள்ளன். தமிழர்களான நாம் கலை என்று வந்துவிட்டால் மொழி பார்ப்பது இல்லை. லதா மங்கேஷ்கர் உள்பட இந்தி கலைஞர்களை அங்கீகரிக்கிறோம், பாராட்டுகிறோம். ஆனால், நமது பி.சுசீலா என்ற அற்புதமான பாடகியை அவர்கள் ஏற்பது இல்லை.
