பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நித்யாமேனன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தலைவன் தலைவி’. கணவன், மனைவி இடையே உள்ள மோதல், பிரிவை பற்றி நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. தொடக்க காலத்தில் தனது உடல் தோற்றத்திற்காக விமர்சனம் செய்யப்பட்ட நித்யா மேனன் பிறகு, ‘ஓகே கண்மணி’, ‘காஞ்சனா 2’, ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களில் தனது யதார்த்த நடிப்பால் அந்த விமர்சனங்களை மறையச் செய்தார். சமீபத்தில், தனுஷ் ஜோடியாக நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் நித்யா மேனன் அளித்த பேட்டியில் தனது உடல் தோற்றம் பற்றி ஓப்பனாக பேசியுள்ளார். அவர் பேசும்போது, ”நடிகை என்றால் ஒல்லியாகத்தான் தோற்றமளிக்க வேண்டும் என்ற கடுமையான அழுத்தம் இந்த துறையில் இருக்கிறது. அது வெளித்தோற்றம் மட்டுமே, நான் அதை கடந்து வேறு ஏதாவது ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன். நான் ரசிகர்களின் உள்ளம், ஆன்மாவை சென்றடையும் வகையில் கேரக்டரை தேர்வு செய்து நடிக்க விரும்பினேன்.
என் குறிக்கோள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் தோற்றமளிப்பது அல்ல. அதை செய்ய இங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தில் நடிக்கும்போதும் அதற்கு ஏற்றவாறு நடிக்க விரும்புகிறேன். யதார்த்தமான படங்களை உருவாக்க, நமது யதார்த்த தோற்றத்தில் தோன்றுவது மிகவும் முக்கியம். ‘தலைவன் தலைவி’ படத்தில் எனக்கு மேக்கப் மேன் கிடையாது. நிஜத்தில் எப்படி இருக்கிறேனோ அப்படியே தான் நடித்தேன்” என்றார்.
