குரங்கனி மலையின் அடிவாரத்தில் வசிப்பவர்களுக்கும், மேற்பகுதி அடர்ந்த காட்டிலுள்ள பழங்குடியினருக்கும் தீராத பகை இருக்கிறது. குரங்கனி யாளீஸ்வரர் கோயில் திருவிழாவை நடத்த ஊரார் முன்பு ஒப்புதல் வாங்கிய விமல், சிருஷ்டி டாங்கே குழுவினர், அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். அப்போது கபீர் துஹான் சிங்கின் போராசையால், யாளீஸ்வரர் சிலையை கடத்த பாரஸ்ட் ஆபீசர் ஜான் விஜய் திட்டமிட, பிறகு நடப்பது மீதி கதை. முக்கிய கேரக்டர்களில் யானையும், காடும் நடித்திருக்கின்றன. யானையை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். தெய்வீக ஒற்றுமையை ஒருவரது பேராசை எப்படி சீர்குலைக்கிறது? அதை ஆன்மிகம் எவ்வாறு சீரமைக்கிறது என்று எழுதி இயக்கியுள்ள தினேஷ் கலைச்செல்வன், ஃபேண்டஸி ஜானரில் சொல்லியிருக்கிறார். யானை மீது பாசமுள்ள விமல், ஊர் திருவிழாவுக்காக உயிரையே தருவேன் என்று சொல்லி வழக்கம்போல் நடித்துள்ளார்.
அவரது மனைவி சிருஷ்டி டாங்கே, திடீரென்று ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். காட்டிலுள்ள கைடு யோகி பாபு, பன்ச் டயலாக் பேசி சிரிக்க வைக்கிறார். மஹிமா குப்தாவின் பழிவாங்கல் வழக்கமானது. ஜான் விஜய், கபீர் துஹான் சிங் நடிப்பு ஓவர். மற்றும் அல்ஃப்ரெட் ஜோஸ், சிவகிருஷ்ணா, இலக்கியா, விஜய் சேயோன், சுபாங்கி ஜா நடித்துள்ளனர். காடு, மலை, அருவியின் அழகை டி.ஆர்.மனஸ் பாபு அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஏ.பிரவீன் குமார், உதய் பிரகாஷ் இசை அமைத்துள்ளனர். உதய் பிரகாஷின் பின்னணி இசை மிரட்டுகிறது. காட்டுவாசிகளுக்கான மேக்கப் ஓ.கே. அவர்கள் பேசும் தமிழ் அந்நியமாக இருக்கிறது. ஆன்மிகம், சிலை கடத்தல், நவீனத்துவம் என்று திரைக்கதை திசை மாறி செல்வதை இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் கவனித்திருக்கலாம்.
