நகராட்சி ஊழியர் மீது கார் மோதிவிட்டு தப்பி ஓடிய நடிகை: பொதுமக்கள் முற்றுகை

குவஹாத்தி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை நந்தினி காஷ்யப். இவர் ருத்ரா என்கிற அசாமி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் குவஹாத்தி பகுதியில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் தனது காரை ஓட்டிச் சென்றிருக்கிறார் நந்தினி. அப்போது குவஹாத்தி நகராட்சி (ஜி.எம்.சி) தெரு விளக்குகளை பழுதுபார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி சாமுவேல் ஹக் என்பவர் மீது நந்தினியின் கார் மோதியதாக கூறப்படுகிறது. 28 வயதான சாமுவேல் ஹக் விபத்தில் பலத்த காயமடைந்திருக்கிறார். அங்கிருந்து தனது காரை எடுத்து தப்பிச் சென்றிருக்கிறார் நந்தினி. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஒரு சிலர் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது நந்தினி, தனது சொகுசு காரை கஹிலிபாராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மறைக்க முற்பட்ட நிலையில் நடிகையின் வாகனத்தை அவர்கள் சுற்றி வளைத்தனர். இதில் அவர்களுடன் நடிகை நந்தினி கடுமையாக வாக்குவாதம் செய்திருக்கிறார். போனில் வீடியோ எடுத்தவரையும் நந்தினி தாக்க முயற்சிக்க அந்த இடமே பரபரப்பானது. இதற்கிடையே, விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு இரண்டு கால்களும் முறிந்த நிலையில், இடுப்பு மற்றும் கை எலும்புகள் உடைந்தன. மேலும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரை ஐசியூவில் கவலைக்கிடமாக உள்ளார். இது குறித்து கஹிலிபாரா போலீசார் விசாரிக்கின்றனர். நந்தினி கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

Related Stories: