ராஜமுந்திரி: ஷங்கர் இயக்கத்தில் 2 வேடங்களில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ஸ்ரீ காந்த் மேகா, அஞ்சலி நடித்துள்ள படம், `கேம் சேஞ்சர்’. வரும் 10ம் தேதியன்று தெலுங்கில் திரைக்கு வரும் இப்படம், இதே நாளில் தமிழிலும், இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. கன்னடத்தில் இந்தி பதிப்பிலும், மலையாளத்தில் தமிழ் பதிப்பிலும் ரிலீசாகிறது. இந்தப்படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சி ராஜமுந்திரியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பவன் கல்யாண் கலந்துகொண்டார். ஆந்திர மாநில துணை முதல்வராக பதவியேற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் திரைப்பட நிகழ்ச்சி இது என்பதால், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய ராம் சரண், `இந்த நிகழ்ச்சியில் கூடியிருக்கும் கூட்டம், ராஜமுந்திரி பாலத்தில் துணை முதல்வர் பவன் கல்யாணின் முதல் தேர்தல் பேரணியின்போது கடல் போல் திரண்டுஇருந்த சம்பவத்தை ஞாபகப் படுத்துகிறது.
இங்கு வந்த அவருக்கு நன்றி. படத்தில் நான் கேம் சேஞ்சர் ஆக நடித்திருக்கலாம். ஆனால், பவன் கல்யாண்தான் இந்திய அரசியலில் உண்மையான கேம் சேஞ்சர். ஒருவேளை, பவன் கல்யாணை இன்ஸ்பிரேஷனாக வைத்து எனது கேரக்டரை டைரக்டர் ஷங்கர் சார் வடிவமைத்து இருக்கலாம்’ என்றார். ராம் சரணுக்குப் பிறகு பேசிய பவன் கல்யாண், `ராம் சரணை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர் ஹாலிவுட் சென்றுவிட்டார். ஆஸ்கருக்கு சென்றுவிட்டார். தொடர்ந்து அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன். ஒரு சித்தப்பாவாக இல்லாமல், ஒரு மூத்த சகோதரனாக உன்னை நான் ஆசீர்வதிக்கிறேன். நிறைய படங்களை தியேட்டரிலேயே பார்க்க
மாட்டேன். முன்பு சென்னையில் இருக்கும்போது ஷங்கர் சாரின் ‘ஜென்டில்மேன்’ படத்துக்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன். ‘காதலன்’ படத்தை என் பாட்டியுடன் சென்று பார்த்தேன்’ என்றார்.